Tuesday, June 16, 2009
முடியாதது முயலாதது மட்டுமே
ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார். அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை. - என்.கணேசன்
Posted by N.Ganeshan
NANDRINGGA Ganeshan
Enave indre Muyalunggal www.g1g4lite.net (Guest code 71184) paarunggal. unggal varumai piniyai viratti adiyunggal.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment